இந்து மதமான இந்திய மதத்திலே, இந்திய மதமாம் இந்து மதத்திலே, தர்மம் என்ற ஒன்று உள்ளது. ஆகவே, இந்து தர்மம் என்று சொல்கிறோம் இந்து மதம் என்பதை விட. தர்மம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல், ஐரோப்பிய மொழிகளில் இல்லையென்றே தோன்றுகிறது நான் தேடிப் பார்த்தபோது. ஏனெனில் தர்மம் என்றால் உண்மை என்று பொருள்படாது, கற்பு என்று பொருள்படாது. நேர்மை என்று பொருள்படாது. பல்வேறு சிறப்பம்சங்களின் தொகுப்பாக அந்த தர்மம் உள்ளது. தர்மம் என்றால் பிச்சை போடுவது அல்ல. ஏனென்றால், பிச்சைக்காரர்கள் என்பது பிச்சை, தர்மம் போடுங்க தாயே! என்று சொல்வதை நம்மில் சிலபேர் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள். தர்மம் என்பது வாழும் நெறி.
அந்த வாழும் நெறியை பல்வேறு விதங்களில் பிரித்து, ஒவ்வொன்றுக்கும், தர்மம் வைத்து முறைப்படி ஆட்சி நடத்தி, வாழ்க்கை நடத்தி, ஆதாரங்களைப் பெருக்கி வருவது இந்த நாட்டின் தர்மம் என்றே சொல்லலாம். தானத்திலே தர்மம் இருக்கின்றது, தான தர்மம். யுத்தத்திலே தர்மம் இருக்கின்றது, யுத்த தர்மம். வியாபாரத்திலே தர்மம் இருக்கின்றது, வியாபார தர்மம். குடும்பத்திலே தர்மம் இருக்கின்றது, குடும்ப தர்மம். ஆளுமையிலே தர்மம் இருக்கின்றது, ஆளுமை தர்மம். நட்பிலே தர்மம் இருக்கின்றது, நட்பு தர்மம். விவசாயத்திலே தர்மம் இருக்கின்றது, விவசாய தர்மம்.
வாழ்வில் அத்தனை பகுதிகளுக்கும் தர்ம நெறிகளை வகுத்து, கதைகளை உருவாக்கி, பின்வரும் சந்ததிகளுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், தெளிவான நூல்களை உருவாக்கி இருக்கக் கூடிய ஒரே ஒரு மதம் இந்திய மதமான இந்து மதம். அந்த தர்மத்தில் இருக்கக்கூடிய அத்தனை பிரிவுகளையும், ஒவ்வொன்றுக்கும் எப்படி தர்ம நெறியை பின்பற்ற வேண்டும் என்று கூற வேண்டுமென்றால் அதற்கு தனியாக ஒரு நூல் வெளியிட வேண்டும். அது, இப்போது முடியாது.
சிலபேர் சொல்லுவாங்க, அவங்கவங்க மதத்தைப் பத்தி, மார்க்கத்தப் பத்தி சொல்லுவாங்க. இதை கடைப்பிடியுங்களென்று. நம்முடைய தர்மநெறிகளைப் பற்றி அதிகமா தெரியாம, ஓஹோ இதுல அப்படி சொல்லி யிருக்கோன்னு, நம்மாளுங்க இந்து தர்மத்தில் எதுவும் கூறவில்லை என்று சொல்வார்கள். அந்த மதத்தில், அந்த மார்க்கத்தின் தர்ம நெறியைப் பற்றி சொல்லாம, வாழ்வியல் நடைமுறையைப் பற்றி சொல்வார்கள். அவர்களுடையது தான் தர்மம் என்று பெரிதாக பேசுவார்கள். லெட்டர் பேட்ல போட்டுக்குவாங்க.
ஒரு சின்ன உதாரணம், மன்னிப்பு என்பது கிறிஸ்துவ மதத்தில் அதிகமாக உள்ளது. அது, என்னவென்றால், ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காண்பி, மன்னித்து விடுன்னு சொல்றாங்க. அப்படி ஒன்றும் நம்முடைய மதத்தில் கூறவில்லையோன்னு புதியவர்கள், இளைஞர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால், நம்முடைய மதத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால்,
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”
ஒரு மன்னிப்போடு விட்டு விடாதே, அவனே வெட்கப்படும் அளவிற்கு நன்மையை செய்து விடுன்னு சொல்றாங்க. இதில் எது உயரியது? அதே போல், கற்பு நெறி பற்றி பேசும்போது, பிறன்மனை நோக்காதேன்னு கூறியிருக்கிறார்கள். நாமோ,
“உள்ளத்தால் எள்ளவும் தீதே பிறன்மனையை கள்ளத்தால் கள்வேன் எனல்” என்கிறோம். மனதில் கூட நினைத்துப் பார்க்காதே, இதேபோல், அனைத்து விஷயங்களிலும் சுத்தம், சுகாதாரம், நட்போடு இருத்தல், சங்கமித்திருத்தல் அனைத்திலும் உண்டு.
மிக உயரிய பண்பட்ட நெறிகளை பல ஆண்டுகளாக பின்பற்றி வருவது தான் இந்து சமுதாயம், இந்திய சமுதாயம். எல்லாவற்றிலும் இருக்கின்றது. இப்போது தர்மம் என்று எடுத்துக் கொண்டால் பிச்சை போடுவது. தர்மத்திலே, பிச்சை போடுவது என்பதற்கான விரிவுரையை கொடுத்திருக்கிறார்கள்.
அது என்னவெனில், கொடுப்பவன் கை உயர்ந்திருக்க வேண்டும். வாங்குபவன் கை தாழ்ந்திருக்க வேண்டும். நம்மை விட நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு தர்மத்தை அளிக்க வேண்டும். நம்மை விட பணக்காரர்களுக்கு தர்மம் செய்ய கூடாது. பொருளாதாரத்தில் நாம் பெரியதாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். தானமாகக் கொடுத்த பொருளை திரும்ப வாங்கக் கூடாது. பிச்சையெடுக்கக் கூடாது. ஆனால், பிச்சையெடுத்து வரும்போது, கொடுக்கக்கூடிய அளவுக்கு இருந்தும் கொடுக்கவில்லையெனில், அது அதைவிட கேவலம் இல்லை.
தொழில் சம்பந்தப்பட்ட பொருள்களை தானம் கொடுக்கக் கூடாது. அன்னதானம் கொடுக்கலாம். எல்லாருக்குமே அன்னதானம் கொடுக்கலாம். பசியோடு யாருமே இருக்கக் கூடாது. யாருமேன்னா தான், தன் குடும்பம், பிற வீட்டார், எதிரி, மாற்றான், அனாதை, வெளிநாட்டிலிருந்து வந்தவன் என யாருமே பசியோடு இருக்கக் கூடாதுன்னு சொல்கிற ஒரே ஒரு மார்க்கம் இந்து மார்க்கம் தான். அதனால் தான், எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும், முதலில் பரதேசியை தேடிப்பிடித்து அவர்களுக்கு உணவளித்து பிறகு நாம் சாப்பிடுவோம்.
பரதேசி என்றால் ஒண்ணுமே இல்லை. பிறநாட்டான், பிறதேசன். அதனால், வெளிநாட்டிலிருந்து யாராவது இருந்தால், முதலில் அவர்களைக் கூப்பிடுங்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அவர்களுக்கு உணவளிப்பது என்பது தேவர்களுக்கு உணவளிப்பது.
அதுவும் எப்படி கொடுக்க வேண்டுமென்றால், உண்ட உணவிற்கு சரியான உணவை கொடுக்க வேண்டும் என கிறிஸ்துவ மதத்தில் கூறியிருப்பதாக என்னுடைய நண்பர் கூறினார். ஆனால், இந்து மதம் என்ன சொல்கிறதென்றால், தான் உண்ணும் உணவில் எது மிக மிக சிறப்போ, அதைக் கொடுக்க வேண்டும். நல்லதை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, மீந்துப்போனதை நாம் உண்ணவேண்டும். இதில் எது உயரிய நெறி. சமமாக கொடுப்பதா, இல்லை இருப்பதிலேயே உயர்ந்ததா கொடுப்பதா?
யுத்தநெறியை பார்த்தோமானால் அதில் மிக உயர்ந்த தத்துவம் உள்ளது. எங்கு சண்டை போடணும், எப்படி சண்டை போடணும், எத்தனை முறை வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஜெயிச்சதுக்குப் பிறகு எதிரி நாட்டு மன்னனை எப்படி நடத்த வேண்டும். அவனுக்கு உயிர்வாழ, படைகளை உருவாக்க, வழிவகை செய்து கொடுக்க வேண்டும். ஏன்னா அவனும் ஒரு அரசன்.
விவசாயத்திலே எப்படி செய்ய வேண்டும். கடவுளுக்கு நிகராக நினைத்து அந்த நிலத்தை நாம் வாங்க வேண்டும். பாம்பு, மரத்தையெல்லாம் தெய்வ அம்சமாக பார்க்க வேண்டும். ஏனெனில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. விவசாயம்னு வரும்போது, பாம்புகள், விலங்குகள், மரங்கள் அத்தனையும் கன்சிடர் பண்ணி தெய்வாம்சமாகப் பார்த்து, ஒரு மரத்த வெட்டணும்னா குறி கேக்கணும்னு சொல்லுவாங்க. குறி கேக்கறதுன்னா ஒண்ணுமில்ல. ரொம்ப ஆராய்ச்சி பண்ணி வெட்டியே தீரணும் என்பது தான் குறிகேட்பது.
அம்மாவுக்கு என்ன கடமை இருக்கு, அப்பாவுக்கு என்ன கடமை இருக்கு, பிள்ளைகளுக்கு என்ன கடமை இருக்கு. இதப்பத்தி தனியாவே சொல்கிற அளவுக்கு பெரிய பெரிய படைப்புகள் உள்ளது. எனவே, தர்மம் என்று வரும்போது, நெறி என்று வரும்போது, அது எதற்கான தர்ம நெறிகளா இருந்தாலும் சரி, அவ்வளவும் முறைப்படி வகுக்கப்பட்டு, சொல்லப்பட்டு, கதைகள் உருவாக்கப்பட்டு, இருக்கக்கூடிய சிறப்பான ஒரே ஒரு நெறி, இந்து தர்ம நெறி. இந்திய தர்ம நெறி.
நன்றி, வணக்கம்.