ஒரு மிக முக்கியமான சந்திர கிரகணம் நடந்தது. மிக நீளமான சந்திர கிரகணம் என்று சொன்னார்கள். அவ்வளவு நீளமான சந்திரகிரகணம் அடுத்து 3000 வருடத்திலே வரும். ஏறத்தாழ 1000 வருடங்கள் தாண்டித் தான் வரும் என்று சொன்னார்கள். டிவியில் எல்லாம் அதைப்பற்றிய பேச்சாக இருந்தது. இந்த நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் சந்திரகிரகணம் அது.

இந்த சந்திரகிரகணத்துக்கு முதல்நாள் வரையில், நான் ஒரு பக்கா நாத்திகன். கடவுள் நம்பிக்கை என்பதே எனக்குத் துளியும் கிடையாது.

பெங்களூரு, அவன்யூ ரோடு கட்டிங்ல ஒரு சின்ன மேன்சன்ல கடைசி ரூம்ல தங்கிட்டு இருந்து பெங்களூருவில் பிஸ்னஸை பார்த்துக் கொண்டு இருந்தேன். இரவு பகலாக அயராது உழைத்துக்கொண்டிருந்தேன்.

இதற்கு முன்னாள் சென்னையில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து வீணாப்போயி நடுரோட்டுக்கு வந்து விட்டேன். அவன்யூ ரோடுல, ரைட் சைடுல ஒரு ஓட்டல்ல தான் நான் சாப்பிடுவேன். அங்கு ஒரு வயதானவர் டோக்கன் குடுப்பாரு. கன்னடத்தில் பேசி என்னை விசாரிப்பார். எனக்கு ஒன்றும் புரியாது. நான் அரைகுறை இங்கிலீஷ்ல பேசி வெச்சிடுவேன். மணி 8 அல்லது 8.30 இருக்கும். சாப்பாடு வாங்குவதற்காகப் போனேன். ஓட்டல் காலியாக இருந்தது. மொத்தம் 20 டேபில்ல ஒருத்தர் இரண்டு பேர்தான் இருந்தாங்க. சாப்பாட்டுக்கு டோக்கன் கேட்டேன். அவரு ஏதோ கன்னடாவுல சொன்னாரு. எனக்கு எதுவும் புரியல. ஓட்டலும் காலியா இருக்கு. இவரு என்ன சொல்றாருன்னும் புரியல. சரின்னு உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே அந்தப் பசங்க வந்து ஏதோ சொன்னாங்க. அதுவும் புரியல. அப்புறம் முணுமுணுத்துக் கொண்டே போய் சாப்பாடு கொண்டு வந்து வெச்சாங்க. நல்லா வயிறு முட்ட சாப்பிட்டேன். ஏன்னா கூட்டமும் இல்ல.

அங்கே காய், பொறியல் எல்லாம் எப்பவுமே எனக்கு கூடுதலாக வைப்பார்கள். இன்றைக்கு வழக்கத்தை விடக் கூடுதலாக வைத்தார்கள். சாப்பிட்டு விட்டு அவன்யூ ரோட்டிற்கு வந்து பார்த்தேன். அந்த நேரத்திற்கு ஏற்ற சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தது. சரின்னிட்டு, என்ன இது? ஹோட்டலும் காலியா இருக்கு, சாப்பிடும் போது அந்தப் பசங்க வேற ஏதோ சொன்னாங்க. நான் சாப்பிட்றத வேற எல்லாரும் அதிசயமாப் பார்த்தாங்க. அதுக்கப்புறம் பார்த்தா ரோடும் காலியா கிடக்கு. பிறகு நான் தங்கி இருந்த இடத்திற்கு வந்தேன்.

அது 3வது மாடியில் கடைசி ரூம்ல இருந்தது. பாத்ரூம் மொட்டை மாடி நான்காவது மாடில இருக்கும். சரி பாத்ரூம் போயிட்டுப் போலாம்னு மொட்ட மாடிக்குப் போனேன். அப்போது தான் சந்திரகிரகணம் ஆரம்பித்ததே தெரிந்தது. ஆஹா, சந்திரகிரகணம் இருக்கும் போது சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. நாம சாப்புட்டு வந்துருக்கோம். அதைத்தான் அந்த பெரியவரும் சொல்லியிருக்காரு, மத்தவங்களும் வித்தியாசமா பார்த்து இருக்காங்க. ச்சே! கடவுள் நம்பிக்கை நமக்கு இல்ல, ஆனாலும் மத்தவங்க பின்பத்தினதக் கூட நாம பின்பற்றிக் கொண்டு தானே இருந்தோம். ஏற்கனவே தொடர்ந்து சோதனை காலமாகத் தானே இருக்கிறது. குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய பொருளாதார சூழ்நிலை. பழக்கமில்லாத ஊரிலே தனித்து வாழ்கிற சூழ்நிலை.

இதைத் தான் ஏற்கனவே சன்டிவியில் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே சொல்லிகிட்டு இருந்தாங்க. ரொம்ப முக்கியமான சந்திர கிரகணம் இது. நாங்க லைவா காண்பிப்போம்னு. திரும்பவும் இதப் பாக்க முடியாது. 900, 1000 வருடத்திற்கு ஒருமுறை வரும் சந்திரகிரகணம்னு சொன்னாங்க. வழக்கமாக சாப்பிட்றதை விட அதிகமாக சாப்பிட்டுட்டோம். இனி என்னென்ன பிரச்சனைகள் வரப்போகுதோ, அப்படின்னு சொல்லிட்டு சோகமா போய் என் ரூம்ல படுத்துகிட்டு இருந்தேன். விரக்தி, சோகம், வெறுப்பு, சுய அருவெறுப்பு எல்லாம் கலந்த எண்ணங்களோடு ஜூலை 16, சந்திரகிரகணம் நடந்துட்டு இருந்தது. அன்று இரவு நான் போய்ப் படுத்துட்டேன். தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

தூங்க ஆரம்பிச்ச உடனே தூக்கத்திலே ஒரு கனவு. கனவிலே நான் திருப்பதி தேவஸ்தானம் கோயில்ல கியூல நிற்கின்றேன் தரிசனத்திற்காக. கியூல நிக்கும் போது என்னை விட வயது குறைவு, திருமணமாகாதவர்கள் பக்திப் பரவசத்தோடே கியூல வராங்க பெருமாள தரிசிக்கணும்னு. நான் ஒரு சாதாரண மூட்ல இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டே மத்தவங்க கும்பிடும் போது, இவன் திமிராப் போறான்னு மத்தவங்க நினைக்கக் கூடாதுன்னு போனேன்.

அந்த நிகழ்வுகள் எல்லாம், கூட்டம், படிக்கட்டுகள், கூட இருந்தவங்க எப்படி இருந்தாங்கன்னு இப்பவும் எனக்கு பசுமரத்தாணி போல் அப்படியே ஞாபகத்தில் இருக்கு. அந்தக் கியூ முடிந்து இடது பக்கமாகத் திரும்பும் போது, பெருமாளோட தரிசனம் ஆரம்பம். நான் பெருமாளையும் பாத்துட்டு வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என சுத்திச் சுத்தி பார்த்துக்கொண்டே போனேன். ஏன்னா எனக்குத்தான் பக்தி கம்மியாச்சே. பார்க்கும் போது அந்த கியூ முடிந்து திரும்ப வர்ற இடத்தில திரும்ப தள்ளி ஒரு ஸ்டோன் பென்ச், ஒரு பில்லர் மாதிரி இருக்கு. அதை பலிபீடம்னு சொல்லுவாங்களா? தெரியல. அங்க இலை நிறைய சக்கரைப் பொங்கல் இருந்துச்சு. அதை நான் பார்க்கிறேன். இத ரொம்ப பக்திமான்கள், இல்லன்னா விஐபிக்கு கொடுப்பாங்களா இருக்கும். அப்புடின்னு நினச்சிட்டு நான் பாட்டுக்கு பேசாம இருந்துட்டேன். என்னோட டேர்ன் வருது. சாமி தரிசனம். நான் போய் கும்பிட்றேன். கும்பிட்டுத்தானே ஆகனும், நம்பிக்கையில்லை என்றாலும். கும்பிட்டு முடித்தவுடன் வழக்கம் போல் ‘ஜரிகண்டி! ஜரிகண்டி’ ன்னு விரட்டி விட்றாங்க. வர்றோம். வெளியே வரும் போது பிரசாதத்துக்கு அருகில் உள்ள இடத்தில் கியூ தொடர்ந்து வருது. அந்த பிரசாதத்துக்குப் பக்கத்துல ஒரு பெரியவர் நிக்கிறாறு. அவரு ரொம்ப வயதானவர். வெள்ளை உடை உடுத்தியிருந்தார். ஏறத்தாழ பழைய காஞ்சிப் பெரியவர் இருந்தாருல்ல. மகா பெரியவருன்னு சொல்லுவாங்களே சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்.

அவரோட உருவத்தோட ஒத்துப் போகற அளவுக்கு இருந்தது. அவர் அந்த பிரசாதத்துக்கு முன்னாடி நிக்கிறாரு. நான் நிக்கிற வரிசை கண்டு ‘மகாதேவன் வாங்க!’ அப்படின்னு சொன்னாரு. நான் பின்னாடி யாரோ மகாதேவன்னு நெனச்சேன். நான் கண்டுகொள்ளவில்லை. திரும்பவும், ‘மகாதேவன் வாங்க உங்களத்தான்!’ அப்படின்னு சொன்னாரு. நான் பின்னாடி திரும்பிப் பார்க்கிறேன். பின்னாடி யார கூப்பிட்ராங்கன்னு தெரியல. ‘உங்களத்தான் மகாதேவன் வாங்க!’ அப்படின்றாரு. நான் தயங்கித் தயங்கி வர்ரேன். அப்படியும் என்னைத்தாண்டி ஒரிஜினல் மகாதேவன் ஓவர்டேக் பண்ணிட்டு வந்துடுவாங்கன்னு நெனச்சேன். ‘மகாதேவன் வாங்க உங்களத்தான்!’ அப்படின்றாரு. நான் ரொம்ப தயக்கத்துல போய் நிக்கறேன். ‘இந்தப் பிரசாதமெல்லாம் உங்களுக்குத் தான். எடுத்துங்கங்க!’ அப்படின்றாரு. நான் மேல அவரு முகத்த பாக்கறேன், அண்ணாந்து, கீழே இடுப்பளவுல அந்தப் பிரசாதம் இருக்கு. அதையும் பார்க்கிறேன். என்ன இது நம்ம ஒழுங்கா குளிச்சு பயபக்தியா சாமி கும்பிட்ற ஆளு கிடையாது. பேருக்கு இங்க வந்துருக்கோம். நம்மளுக்குப் போய் பிரசாதம் குடுக்குறாரே. இதெல்லாம் மிகப்பெரிய பக்திமானகளுக்குக் கொடுக்க வேண்டியதாச்சேன்னு நினச்சி தயங்கி நின்று, ஒரு மூலையில் கொஞ்சமாக எடுக்கிறேன். ஒரு ஸ்பூன்லையும் பாதி.

‘அப்படியே எடுத்துக்கங்க!’, திரும்பவும் ஒரு நாலு ஸ்பூன் இருக்கற மாதிரி கையில எடுக்கிறேன். ‘எல்லாமே உங்களுக்குத் தான், எல்லாத்தையும் எடுத்துக்கங்க!’ அப்படின்றாரு அவரு. இப்ப என்ன டெஸ்டு பண்றாருன்னு எனக்கு கன்பார்ம் ஆயிடுச்சு. இப்ப ரெண்டு கையையும் கூப்பி எடுக்கிறேன். பெரும்பகுதியை என்னுடைய கையில் ஏந்திக் கொள்கிறேன். அப்புறம் அடுத்தவங்களுக்கு மிச்சம் வேணுமில்லையா?

மிச்சம் வெச்சி, பெரும் பகுதியை என்னுடைய கையிலே ஏந்திக் கொள்கிறேன். அப்பவந்து அவரு என்னைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரிக்கிறார். அந்த சிரிப்போட அர்த்தம் என்னன்னு, எனக்குப் பட்டது. ‘எல்லாத்தையும் எடுத்துக்க சொன்னாலும் நீ எடுத்துக்க மாட்ட. மத்தவங்களுக்கு வெச்சிட்டு தான் எடுப்பன்னு எனக்குத் தெரியும்!’.

அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு. கை நிறைய பிரசாதம், கனவு கலைந்தது. முழித்துப் பார்க்கிறேன். சன்டிவி ஆன் பண்றேன். கிரகணம் அப்பத்தான் விட்ருக்கு அப்படின்றாங்க. அப்ப வந்து எனக்கு ஒரு சந்தோஷம் வந்துச்சு. ஒரு திருப்தியும் வந்துச்சு. ஒரு புன்னகை, ஒரு வெற்றி. அது என் வாழ்நாள் முழுவதும் இருந்துக்கிட்ருக்கு. அந்த நிமிடம், அந்த நொடி, அந்த நாள். நான் நாத்திகத்துல இருந்து ஆத்திகனா மாறினேன்.

நிறைய பேருக்கு இதை ரெக்கார்டு பண்ற அளவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியல. இதப்பத்தி நான் பெரும்பாலும் சொல்றதில்ல. ஆனா இப்ப வந்து நம்மளுடைய அன்பர் ஒருவர் சந்திர கிரகணத்தப் பத்தி நீளமான ஒரு வீடியோ அனுப்பி யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று அனுப்பி, கர்ப்ப ஸ்திரிகள் வெளியே செல்லக் கூடாதுன்னு சொல்லும் போது என்னுடைய நினைவலைகள் சுழன்று சென்றன. இந்த உன்னதமான நிகழ்வு என்னுடைய வாழ்க்கையில் நடந்ததற்கு நான் பாக்கியவானாக இருக்கிறேன். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அடிமைப் பட்டவனாக இருக்கின்றேன். அவர் உண்மையிலேயே, ‘உண்டென்று சொல்வார்க்கும், இல்லையென்று சொல்வார்க்கும் கண்கண்ட தெய்வமே சீனிவாசா!’ அப்படின்னு ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டை முழுவதும் உணர்ந்தேன் நான். இதை என்ன சொல்ல முடியும்? ‘அறிவியலே இந்து மதம்!’ என்று ஒரு டைட்டில் வெச்சிட்டு நான் என்ன அறிவியல சொல்ல முடியும்? ஆனாலும் சொல்லியே வேண்டும் என்று தோன்றியது. தோன்றியதை நான் சொன்னேன்.

இறைபக்தியுடன் இருங்கள். இறைபக்தி இல்லாமலும் இருங்கள். கடவுள் பக்தியுடன் வழிபடுங்கள். வழிபடாமலும் இருங்கள்.

‘மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின்’

என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி பூஜை புனஸ்காரம் செய்யுங்கள், செய்யாமலும் இருங்கள். உலகத்துல பழியானது, செய்யாமல் இரு! கண்டிப்பா கடவுள் காப்பாற்றுவார், அருள் பாலிப்பார். நம்மை சந்தோஷமாக வைத்திருப்பார்.

அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>